ரூ.20 கோடி தராவிட்டால் உன்னை கொன்று விடுவோம்.! முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்..!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மின்னஞ்சலில், “நீங்கள் எங்களுக்கு ரூ.20 கோடி தராவிட்டால், உங்களை (முகேஷ் அம்பானி) கொன்று விடுவோம். இந்தியாவிலேயே மிகச் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் எங்களிடம் உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் வருவது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல் அழைப்பு விடுத்ததற்காக பீகாரின் தர்பங்காவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் அந்த அழைப்பில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரையும், மும்பையில் உள்ள ஹெச்என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையையும் வெடிவைத்து தகர்க்கப்போவதாக மிரட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.