இதை செய்யாவிட்டால் எனது மனைவி கோபப்படுவாள்..! வைரலாகும் போலீஸ் அதிகாரியின் விடுப்பு கடிதம்..!
ஹோலி பண்டிகையை முன்னிட்டு விடுப்பு கேட்டு இன்ஸ்பெக்டர் ஒருவர் எஸ்.பி எழுதியுள்ள விடுப்பு கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், திருவிழாவை கொண்டாடும் மக்களுக்கு பாதுகாப்பாக போலீஸ் அதிகாரிகள் பலர் பாதுகாப்பில் ஈடுபடுவதுண்டு. எனவே திருவிழாவைப் பொறுத்தவரையில் காவல்துறை அதிகாரிகளுக்கு விடுமுறை கிடைப்பது சற்று கடினம் தான்.
இன்ஸ்பெக்டரின் விடுப்பு கடிதம்
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் ஃபரூகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் அசோக் குமார் என்பவர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பத்து நாட்கள் விடுமுறைக்காக விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார். இந்த விடுமுறை விண்ணப்பம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்பெக்டர் அசோக் குமார், எஸ்பி-க்கு விடுப்பு கடிதத்தை அளித்துள்ளார். அந்த கடிதத்தில் கடந்த 22 ஆண்டுகளாக ஹோலிக்கு தனது பெற்றோர் வீட்டுக்கு தன்னை அழைத்துச் செல்லும்படி தனது மனைவி கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அவளின் இந்த ஒரு விருப்பத்தை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.
இந்த ஹோலிக்கு அவளை மீண்டும் கோபப்படுத்தாமல் இருப்பதற்காக பத்து நாட்கள் விடுப்பு தரும்படி அந்த கடிதத்தில் எழுதி உள்ளார். இவரது கடிதத்தை பார்த்த எஸ்.பி அசோக்குமாருக்கு மார்ச் 4 முதல் 5 நாட்கள் விடுப்பு வழங்கியுள்ளார்.