நீங்கள் திரும்ப பெறவில்லை என்றால், நான் திரும்ப கொடுப்பேன் – அதிரவைத்த விஜேந்தர் சிங்!
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிடில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி ஒப்படைப்பேன் என்று குத்துசண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேச விவசாயிகள் தொடர்ந்து 11வது நாளாக கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், 5 கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கூட சுமுகமான தீர்வு கிடைக்கவில்லை. இதில் பல்வேறு விவசாய அமைப்புகளின் 40 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனால் மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த உணவை கூட ஏற்காமல் தாங்கள் கொண்டுவந்த உணவுகளை மட்டுமே சாப்பிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் பாஜக கூட்டணி அல்லாத கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றனர். அந்தவகையில், இன்று குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங் போராட்டத்தில் கலந்துகொண்ண்டார். அப்போது பேசிய அவர், வேளாண் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெற தவறினால் தனக்கு அளித்த ராஜீவ் காந்தி கெல் ரத்னா விருதை திருப்பித் தருவதாக தெரிவித்துள்ளார்.
ஜூலை 2009 இல் விஜேந்தர் சிங்ற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. விளையாட்டுகளில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, இந்திய குடியரசின் மிக உயர்ந்த விளையாட்டு விருது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை விஜேந்தர் சிங் திரும்ப தருவதாக கூறியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.