பொய் பேசுவதற்கு விருது கொடுக்க வேண்டும் என்றால் அது அவருக்குத்தான் – அமித்ஷா

புதுச்சேரி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று புதுச்சேரியில் நடைபெற்று வரும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், வரும் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என கூறியுள்ளார். பொய் பேசுபவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்றால் அதை நாராயணசாமிக்கு தான் தரவேண்டும் என விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் ஊழலை வளர்க்கும் வேலையை மட்டுமே நாராயணசாமி செய்தார். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாமல் இருந்ததற்கு நாராயணசாமிதான் காரணம் என்றும் புதுச்சேரிக்கு மத்திய அரசு கொடுத்த பணத்தை காங்கிரஸ் தலைமையிடம் கொண்டு சேர்த்தார் நாராயணசாமி எனவும் குற்றசாட்டியுள்ளார்.
மேலும் வரும் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்தால் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடையும். புதுச்சேரி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்றும் புதுச்சேரி அரசு தானாக கவிழ்ந்ததால் காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜகவில் வந்து சேருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் பாஜக பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு பேரணியில் அமித்ஷா கலந்துகொள்ளவுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் நடைபெற இருக்கும் பொது கூட்டம் மற்றும் பேரணியில் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.