கணவரின் சம்பளம் அதிகரித்தால், மனைவிக்கும் ஜீவனாம்சம் அதிகரிக்க உரிமை உண்டு: ஹரியானா உயர் நீதிமன்றம்
விவாகரத்துக்குப் பிறகு, கணவரின் சம்பளம் இந்த காலகட்டத்தில் அதிகரித்தால் மனைவிக்கு ஜீவனாம்சம் அதிகரிக்க உரிமை உண்டு என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹரியானாவில் பஞ்ச்குலாவில் வசிக்கும் வருண் ஜகோட்டா,இவருக்கும் இவர் மனைவிக்கும் இடையே விவாகரத்து நடைபெற்றுள்ளது.இவர் தனது மனைவிக்கு மாதம் 20,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கி வந்துள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் வருனின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் அவரது மனைவி தனக்கான ஜீவனாம்சம் தொகையை உயர்த்த வேண்டும் என்று குடும்ப நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
இதனை விசாரித்த குடும்ப நீதிமன்றம் இவர் வழங்கிவந்த ஜீவனாம்சம் தொகை 20 ஆயிரத்தில் இருந்து 28,000 ஆக வழங்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தது.இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் அவர் கூறியதாவது தனக்கான சம்பளம் ரூ .95 ஆயிரத்திலிருந்து ரூ .1 லட்சம் 14 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும்,பிடித்தம் போக ரூ.92,175 ஆகவும் இருக்கும் என்று தனது வாதத்தை முன் வைத்திருந்தார்.தனக்கு கிடைக்கும் இந்த வருமானத்திலிருந்து எப்படி 28 ஆயிரம் ரூபாய் மாதம் வழங்க முடியும் என்று முறையிட்டார்.
இதற்கு பதிலளித்த உயர்நீதிமன்றம் நீதிபதி எச்.எஸ்.மதன் விவாகரத்துக்குப் பிறகு, கணவரின் சம்பளம் இந்த காலகட்டத்தில் அதிகரித்தால் மனைவிக்கு ஜீவனாம்சம் அதிகரிக்க உரிமை உண்டு எனவும்,இது சட்டங்களுக்கு எதிராகவும் ஒருசார் பக்கமாகவும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.