‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ – தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என தமிழில் கூறி தமிழ்மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் அவர்கள், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என தமிழில் கூறி தமிழ்மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், மருத்துவக்கல்லூரிகள் திறப்பில் என்னுடைய சாதனைகளை நானே முறியடித்து கொண்டிருக்கிறேன். ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டது தமிழகத்தில் தான் முதல் முறை. இதற்கு முன்னதாக உத்திரபிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்தது சாதனையாக இருந்தது.
மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா தொற்று உணர்த்தியுள்ளது. மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் மருந்துகளுக்கான செலவு தொகை குறைந்துள்ளது. தரமான மருத்துவம் குறைவான செலவில் சிகிச்சை என்ற இலக்கை நாம் சில ஆண்டுகளில் அடைவோம். மருத்துவ சுற்றுலாவுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்தியாவில் உள்ளன என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மொழி கலாச்சாரம் மீது எப்போதுமே எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. குஜராத் மக்களுக்காக குஜராத் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டேன். தாய்மொழிக் கல்வியை தான் நமது அரசு ஊக்குவிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழ் சார்ந்த படிப்புகள் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்துள்ளார்