‘IC-814’ வெப்சீரிஸ் சர்ச்சை! விளக்கம் கொடுத்த நெட்பிளிக்ஸ்!
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிய 'ஐசி-814 தி கந்தஹார் ஹைஜாக்' வெப்சீரீஸ் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை : சமீபத்தில், புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்-ஸில் வெளியாகி இருந்த ‘ஐசி-814 தி கந்தஹார் ஹைஜாக்’ எனும் வெப்சீரிஸ் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த தொடர், கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவமான ஐசி-814 விமான கடத்தலை மையமாக கொண்டு உருவாகி இருந்தது.
அந்த தொடரில், ஹைஜாக் செய்யும் குற்றவாளிகளின் உண்மை பெயர்களை மறைத்து அதற்கு புனைவு பெயராக ஹிந்து மத பெயர்களை பயன்படுத்தி இருந்தனர். இது சமூகத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த சம்பவத்திற்கு இந்து மத பெயர்கள் பயன்படுத்தியது ஏன்? என்ற கேள்விகள் பலரால் எழுப்பப்பட்டிருந்தது.
மேலும், இந்த சர்ச்சையை தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை நெட்பிளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கத் தலைவர் மோனிகாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அதற்கு, விளக்கமளித்துள்ளதாகவும் கந்தஹார் தொடரின் உள்ளடகத்தினை ஆய்வு செய்வதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், இனி வரும் காலங்களில் இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம் எனவும் இனி வெளியாகும் படங்களின் கதையின் கரு முழுமையாக ஆய்வு செய்யப்படும் என மத்திய அரசிடம் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
உண்மை சம்பவத்தின் சுருக்கம் :
கடந்த 1999-ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில், ஐசி 814 எனும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு செல்லும் வழியில், 5 தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. இந்த கடத்தல் 8 நாட்கள் தொடர்ந்து நீடித்தது.
மேலும், அந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் உயிரை காப்பற்றுவதற்கு அப்போது இருந்த வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டிய கட்டயத்திற்கு வந்தது. மேலும், இந்த சம்பவத்தில் அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் இருவரும் முக்கிய பங்கு வகித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.