இந்தியா அன்னிய முதலீடுகளை அதிகமாக வரவேற்கிறது.! ஐ.பி.எம் நிர்வாக அதிகாரி உடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஐ.பி.எம் நிர்வாக இயக்குனர் அரவிந்த் கிருஷ்ணாவுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்தாலோசித்தார். இதில் ஐ.பி.எம் நிறுவனத்தின் இந்திய முதலீடுகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த ஐபிஎம் எனும் பன்னாட்டு தொழில்துறை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீ அரவிந்த் கிருஷ்ணாவுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது இந்தியாவில் நிறைவேற்ற உள்ள ஐ.பி.எம்-இன் முதலீடுகள் பற்றி விவாதித்தார்.
அதில் , ‘தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது எனவும், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொருளாதார மந்த நிலை இருந்தாலும் இந்திய நாடு தற்போது அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். இந்தியா வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வீட்டிலிருந்து வேலை பார்க்கும் Work From Home முறை தற்போது பெருகி வருவதாகவும், இந்த முறையானது நாட்டில் தொழில்நுட்ப மாற்றம் சீராக இருப்பதை உறுதி செய்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும், ஐபிஎம்-இல் 75 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பது பற்றி ஐ.பி.எம் நிர்வாக இயக்குனர் உடன் பிரதமர் மோடி விவாதித்தார்.
இந்தியாவில் 200 பள்ளிகளில் AI பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் சிபிஎஸ்இ உடன் இணைந்து ஐபிஎம் ஆற்றிய பங்கை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். மேலும், ஐபிஎம் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கிருஷ்ணாவை பிரதமர் மோடி வாழ்த்தினார்.
ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா கூறுகையில், ஐபிஎம் நிறுவனத்தின் முதலீடு திட்டங்கள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
இந்த கலந்துரையாடலில் ஐபிஎம் முதலீடு தவிர இந்தியர்களின் தரவு பாதுகாப்பு, இணைய வழி தாக்குதல், யோகாவின் நன்மைகள் என பலவற்றை பற்றியும் பிரதமர் மோடி மற்றும் ஐ.பி.எம் நிர்வாக இயக்குனர் அரவிந்த் கிருஷ்ணா என இருவரும் கலந்தாலோசித்தனர்.