வருங்காலத்தில் பிரக்ஞானந்தா இன்னும் மேன்மை பெற வாழ்த்துகிறேன் – குடியரசு தலைவர்
உலக கோப்பை செஸ் தொடர் போட்டியானது அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். அந்த போட்டியானது முதல் சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், உலக கோப்பை செஸ் தொடரின் வெற்றியாளரைத் தேர்வு செய்வதற்கான “டை பிரேக்கர்” (Tie Breaker) சுற்று இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த டை பிரேக்கர் சுற்றின் முதல் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளை நிறக் காயுடனும், கார்ல்சன் கருப்பு நிறக் காயுடனும் தங்களது ஆட்டத்தைத் தொடங்கினர்.
அதன்படி, பிரக்ஞானந்தா முதலில் e4-க்கு தனது காயை நகர்த்த, கார்ல்சன் e5-க்கு நகர்த்தினார். சிறிது நேரம் வேகமாக இருவரும் தங்களது காய்களை நகர்த்தினர். பிறகு மிகவும் நிதானமாக காய்களை நகரத்திய நிலையில், 47 வது காய் நகர்தலுடன் மேக்னஸ் கார்ல்சன் முதல் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்றார்.
இதனால் டை பிரேக்கர் சுற்றின் இரண்டாவது ஆட்டம் தொடங்கியது. இருவரும் மீண்டும் களமிறங்கினர். இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் ஏற்பட்டது. இருந்தும் ஆட்டம் தொடக்கம் முதலே கார்ல்சன் வேகமாக காய் நகர்த்தினார். இறுதியில் இந்த இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது.
இதனால் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன், 2.5 – 1.5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று, 6 வது முறையாக உலகக்கோப்பை செஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த இறுதி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பதினெட்டு வயதான கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு வந்து FIDE இன் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வென்றுள்ளார்.
விளையாட்டின் எல்லா நேரங்களிலும் சிறந்த வீரர்களில் ஒருவரை எதிர்கொள்ளும் போது அவர் மிக உயர்ந்த அளவிலான சிறப்பை வெளிப்படுத்தினார். இந்த அற்புதமான வெற்றிக்காக அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது தாயார் திருமதி நாகலட்சுமி, வேலம்மாள் பள்ளி மற்றும் அவரது அனைத்து வழிகாட்டிகள் மற்றும் பயிற்சியாளர்கள் சவால்கள் மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில் அவரது விதிவிலக்கான பயணத்திற்கு பங்களித்ததற்காக அவருக்கு வாழ்த்துக்கள். வருங்காலத்தில் பிரக்ஞானந்தா இன்னும் மேன்மை பெற வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
Eighteen-year-old Grandmaster Rameshbabu Praggnanandhaa has won the heart of every Indian by reaching the final and becoming the runner-up in FIDE’s World Cup Final. He displayed highest level of excellence while facing one of the all-times greats of the game. I convey my…
— President of India (@rashtrapatibhvn) August 24, 2023