எம்பிக்கள் கண்ணியமாக நடந்துகொள்ளும் வரை மக்களவைக்கு வரமாட்டேன்..! சபாநாயகர் ஓம் பிர்லா
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து கடந்த 9 நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பிரதமர் அவையில் விளக்கம் அளிக்கவில்லை. இதனைக் கண்டித்து மத்திய அரசு மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த தீர்மானம் மீதான விவாதம் வரும் 8ம் தேதி துவங்க உள்ளது. 10ம் தேதி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார். அன்றே வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று காலை சபை நடவடிக்கைகள் தொடங்கியபோது, எதிர்க்கட்சி எம்.பிக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.
இதனால் 10 வது நாளான இன்றும் மக்களவை தொடங்கிய சில நிமிடங்களில் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மக்களவையின் செயல்பாடு குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் மீது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். எம்.பி.க்கள் சபையின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்துகொள்ளும் வரை லோக்சபாவுக்கு வரமாட்டேன் என்று பிர்லா இரு தரப்பிடமும் கூறி உள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.