‘சட்டமன்றத்திற்கு வரமாட்டேன்’ – சட்டமன்றத்தில் கண்ணீருடன் பேசிய சந்திரபாபு நாயுடு..!
தன்னையும், தன் குடும்பத்தையும் ஆளுங்கட்சியினர் கடுமையாக விமர்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கண்ணீர்மல்க பேட்டி.
ஆந்திராவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தொடரில் ஆளும் கட்சியான ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஆட்சியை சந்திரபாபுநாயுடு அவர்கள் கடுமையாக விமர்சித்தார். மேலும் அக்கட்சி தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் சந்திரபாபு நாயுடு அவர்களை சரமாரியாக விமர்சித்தனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இதனையடுத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசிய சந்திரபாபு நாயுடு, சட்டப்பேரவையில் தனக்கு நேர்ந்த சம்பவங்களை கண்ணீருடன் விவரித்தார். அப்போது பேசிய அவர், எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் பல போராட்டங்களை பார்த்திருக்கிறேன் வாழ்க்கை பயணத்தில் ஏராளமான ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறேன். ஆனால் ஒருபோதும் இதுபோன்ற அவமானத்தை நான் சந்தித்ததில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னை அவமானப் படுத்தி வருகிறார்கள். என் மனைவியைப் பற்றி ஆளும் கட்சியினர் தவறான வார்த்தையினால் அவதூறு பேசுகிறார்கள் என்று கதறி அழுதார்.
மேலும் இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு சபாநாயகர் மௌனமாக அமர்ந்திருக்கிறார், முதல்வரோ எந்த பதிலும் சொல்லாமல் சிரித்துக்கொண்டிருந்தார், எனது சுய மரியாதையை விட்டு விட்டு என்னால் சட்டமன்றத்திற்குள் வர முடியாது. நான் மக்கள் ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெற்று முதல்வராக ஆட்சி அமைத்த பின்பு தான் சட்டப்பேரவைக்கு வருவேன். அதுவரை சட்டப்பேரவைக்கு நுழைய மாட்டேன் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.