‘சாதிக்கு எதிராக போராடுவேன்’ என் குழந்தையை போராளியாக்குவேன்..!!கணவனை இழந்த அம்ருதா.
‘சாதிக்கு எதிராக போராடுவேன்’ என் குழந்தையை போராளியாக்குவேன் – அம்ருதா உருக்கம்!
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைய தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த 14-ம் தேதி மதியம் மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவமனை வாசலிலேயே பிரனயை கூலிப்படையினர் வெட்டிச் சாய்த்தனர். இந்த ஆணவக் கொலை பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அம்ருதாவின் தந்தை மாருதிராவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவரைத்தொடர்ந்து, “பிரனய் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அம்ருதா வெளிவரவில்லை. அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது மருத்துவர்கள் அம்ருதாவை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். அவர் சாப்பிடவும் மறுத்து வருகிறார். நான் தான் அவ்வப்போது சிறிது உணவு வழங்கி வருகிறேன்” என பிரனயின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் அம்ருதாவைப் பார்க்க வருபவர்களிடம் அவருக்குச் சிறிது ஓய்வளிக்கும் படியும் கூறி வருகிறார்.
பிரனயின் வீட்டுக்குத் தொடர்ந்து பல சமூக ஆர்வலர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் இந்தத் தம்பதிக்கு நீதி கிடைக்க தாங்கள் உதவுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், அம்ருதாவும் தன் கணவர் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை பகிர்ந்துள்ளார்.
DINASUVADU