அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றிய இராணுவ வீரர்களுக்கு நிச்சயமாக செக்யூரிட்டி வேளைக்கு வாய்ப்பு கொடுப்பேன் – கைலாஸ் விஜய்வர்கியா
ஒருவேளை பாஜக அலுவலகத்தில் நான் செக்யூரிட்டியை நியமிக்கிறேன் என்றால் அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றிய இராணுவ வீரர்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு கொடுப்பேன் என்று கைலாஸ் விஜய்வர்கியா கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இப்போராட்டம் வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர்.
ரயில்களுக்கு தீ வைப்பது மட்டுமல்லாமல், பாஜக தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் கைலாஸ் விஜய்வர்கியா கூறுகையில், அக்னிபாத் திட்டத்தில் சேரும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் முடித்தபின்பு அவர்கள் கையில் ரூபாய் 11 லட்சம் இருக்கும். அவர்கள் நெஞ்சில் அக்கினி வீரர் என்ற பதக்கம் இருக்கும்.
ஒருவேளை பாஜக அலுவலகத்தில் நான் செக்யூரிட்டியை நியமிக்கிறேன் என்றால் அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றிய இராணுவ வீரர்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார் .அதேபோல் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அக்னிபாத் பயிற்சி பெறும் வீரர்கள் ஓட்டுனர், எலக்ட்ரீசியன், முடி திருத்துதல் உள்ளிட்ட திறன் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இளைஞர்கள் தற்போது போராடி வரும் நிலையில், அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பாஜக தலைவர்கள் பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.