I.N.D.I.A கூட்டணி… நிதிஷ் குமார் பிரதமராக வாய்ப்பு இருக்கிறது.! அகிலேஷ் யாதவ் கருத்து.!
ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணிக்கு எதிராகவும் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி , திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியினை முதலில் ஒன்றிணைத்து முதல் ஆலோசனை கூட்டமே பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது.
அதே போல அடுத்தடுத்த இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திலும் நிதிஷ்குமார் கலந்துகொண்டார். இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமார் தான் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக மாறினார்.
பீகார் அரசியல் குழப்பம்.. பாஜக மாநில செயற்குழு கூட்டம்..!
மேலும், நேற்று குடியரசு தின விழாவை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் மாநில ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து பீகார் மாநில தலைநகரில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அதில், முதல்வர் நிதிஷ்குமார் கலந்துகொண்டார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ளவில்லை. ஒரே கூட்டணியில் இருப்பவர்களின் இருவேறு நிலைப்பாடு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
மேலும், நிதிஷ்குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் இருந்து விலகி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராக நாளை (ஞாயிற்று கிழமை) பதவி ஏற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி மேலும், பரபரப்பை உருவாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்க்வல் வெளியாகவில்லை, என்றாலும் இந்த அரசியல் செய்திகள் பீகார் மாநிலத்தை விட இந்தியா கூட்டணியை பெரிதும் பாதித்துள்ளன.
இந்நிலையில் மேற்கண்ட அரசியல் நகர்வுகள் குறித்து இந்தியா கூட்டணியில் ஓர் அங்கமாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்திர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், இந்தியா கூட்டணியில் யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்படலாம். நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்தியா கூட்டணியை முயற்சி எடுத்து உருவாக்கியவர் நிதிஷ் குமார். கூட்டணியுடன் வலுவாக நின்றிருந்தால் நிதிஷ் குமார் பிரதமர் கூட ஆகியிருக்கலாம்.
இந்த அரசியல் சமயத்தில் காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும். இனியாவது ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளிடம் சமாதானமாக செல்ல வேண்டும். ராகுல் காந்தியுடன் இணைந்து லோக் சபா தேர்தலில் நான் (அகிலேஷ் யாதவ்) பிரச்சாரம் செய்வது குறித்து காலம் தான் பதில் சொல்லும். பிரதமர் பதவிக்கு நான் போட்டிபோடவில்லை. ராமர் கோயில் விவகாரத்தை பாஜக அரசியலாக்குகிறது என்றும் பல்வேறு கருத்துக்களை அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.