‘தந்தையை இழந்த போது எப்படி உணர்ந்தேனோ அப்படி உணர்கிறேன்’ – ராகுல் காந்தி பேட்டி..!
கேரளா : கனமழையின் எதிரொலியால் கேரளாவில் அதிக பாதிப்பை எதிர்கொண்ட சூரல்மலையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். கடந்த ஜூலை-30ம் தேதி அன்று அதிகாலையில் வயநாட்டில் பெரும் செலவில் நிலச்சரிவு ஏற்பட்டது, அதில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 200 பேர் காயமடைந்துள்ளனர்.
அதை தொடர்ந்து நேற்றைய தினமே ராகுல் காந்தி வயநாடு விரைந்து அங்கு பாதிப்படைந்த மக்களை பார்வையிட வரவிருந்தனர். ஆனால், அங்கு இடைவிடாத மழை மற்றும் மோசமான வானிலையின் காரணமாக அவர்களது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து இன்றைய நாள் இருவரும் வயநாடு சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்துவிட்டு ஆறுதல் கூறினார்கள். அதன்பின் அங்கு எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசுகையில், “இது வயநாட்டிற்கும், கேரளாவிற்கும் மற்றும் நம் தேசத்திற்கும் ஒரு பயங்கரமான சோகம் என்றே கூறலாம். இங்குள்ள நிலைமையைப் பார்க்கவே வந்துள்ளோம். எத்தனை பேர் குடும்பத்தினர்களையும், வீடுகளையும் இழந்துள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது.
நாங்கள் எங்களால் முடிந்ததை உதவ முயற்சிப்போம் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வேண்டியதை உறுதி செய்வோம். இங்கு மக்களுக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தை நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை பொறுத்தவரை இது நிச்சயமாக ஒரு தேசிய பேரழிவுதான். அரசாங்கம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். அரசியல் விவகாரங்களைப் பற்றி பேசுவது இது சரியான நேரம் இல்லை என்று நான் நினைக்கிறன். இங்குள்ள மக்களுக்கு உதவி தேவை.
அனைத்து உதவிகளும் மக்களுக்கு வருகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய நேரம் இது. எனக்கு இப்போது அரசியலில் ஆர்வம் இல்லை. வயநாட்டு மக்களுக்கு உதவுவதில் ஆர்வம் இருக்கிறது. என் தந்தை இறந்த போது நான் எப்படி உணர்ந்தேனோ அதை நான் இன்று உணர்கிறேன்.
இங்கு பாதிக்கப்பட்ட மக்கள் தந்தையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தங்களது குடும்பத்தையும் இழந்துள்ளனர். இந்த மக்களுக்கு நாம் அனைவரும் மரியாதை மற்றும் பாசத்திற்கு கடமைப்பட்டுள்ளோம்” என்று ராகுல் காந்தி கூறி இருக்கின்றார்.