எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை… உணர்ச்சிவசப்பட்ட காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா!
கடந்த 21 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய அளவிலான தாக்குதலை மாநிலத்தில் பார்த்ததில்லை என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா பேசியுள்ளார்.

டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில், பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத்தில் இன்று சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது . தாக்குதலில் இறந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு கூட்டத்தில் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உணர்ச்சிவசமாகும் வகையில் பேசினார்.
இது குறித்து பேசிய அவர் ” இந்த சம்பவம் ஜம்மு காஸ்மீரை மட்டுமில்லை முழு நாட்டையும் பாதித்துள்ளது. கடந்த காலங்களில் இது போல பல தாக்குதல்களை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், கடந்த 21 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய அளவிலான தாக்குதலை மாநிலத்தில் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு இந்த தாக்குதலின் பாதிப்பு நம்மளுடைய மனதை வெகுவாகவே பாதித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தன்னுடைய உயிரைப் பற்றி யோசிக்காமல் பல சுற்றுலாப் பயணிகளின் உயிரைக் ஒருவர் காப்பாற்றினார். ஓடிப்போவதற்குப் பதிலாக, அங்கேயே நின்று சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற தனது உயிரைக் கொடுத்துள்ளார். அவருடைய தைரியத்திற்கு நான் தலை வணங்குகிறேன்” எனவும் பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஜம்மு காஷ்மீர் இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பொறுப்பில் இல்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். அதற்காக மாநில அந்தஸ்து கோருவதற்கு பஹல்காம் தாக்குதல் சூழலை வாய்ப்பாக பயன்படுத்த மாட்டேன். 26 பேருடைய உயிர்களின் மதிப்பை நான் குறைத்து மதிப்பிடுவேனா? நான் செய்யும் அரசியல் அந்த அளவுக்கு மட்டமான ஒரு அரசியல் இல்லை. மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முன்பு பேசியிருக்கிறோம், எதிர்காலத்திலும் பேசுவோம்.
இருப்பினும், இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஏற்பாட்டாளராக, சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்புவது எனது கடமை. ஆனால் என்னால் முடியவில்லை. மன்னிப்பு கேட்க எனக்கு வார்த்தைகள் இல்லை” எனவும் ஒமர் அப்துல்லா சற்று எமோஷனலாக பேசினார்.