நான் யாருக்கும் தலைவணங்க போவதில்லை – மாயாவதி
வகுப்புவாத, சாதி மற்றும் முதலாளித்துவ சித்தாந்தங்களை எதிர்த்து போராடுவேன்.
நாளை பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான, இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், லக்னோவில் ஏற்பாடு செய்யப்பட்ட, செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அவர்கள், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரை தோற்கடிக்க எங்கள் கட்சி உறுதியாக உள்ளது.
இதற்காக பாஜக உட்பட எந்த கட்சியையும், நான் ஆதரிக்க தயார் என நான் கூறியது திரித்து பேசப்பட்டு வருகிறது. இதனால், காங்கிரசும், சமாஜ்வாதி கட்சியும், எங்களுக்கும், முஸ்லீம் சமுதாயத்தினருக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த, முயற்சி செய்கின்றனர் எனக் கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி என்பது, எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலிலும் சாத்தியமில்லை. பகுஜன் சமாஜ் கட்சி வகுப்புவாத கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாது. எங்களது சித்தாந்தம் அனைவருக்கும் மற்றும் அனைத்து மதத்தினருக்கும் நன்மை செய்வது தான்.
எங்கள் கட்சி எந்த காலகட்டத்திலும், வகுப்புவாத, சாதி மற்றும் முதலாளித்துவ சித்தாந்தங்களை கொண்டவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது. அத்தகைய கட்சிகளுடன் நட்பு வைப்பதைவிட, அரசியலில் இருந்து விலகி நான் சன்னியாசம் பெற்றுக் கொள்வேன் என்றும், நான் அனைத்து முனைகளிலும், வகுப்புவாத, சாதி மற்றும் முதலாளித்துவ சித்தாந்தங்களை எதிர்த்து போராடுவேன் என்றும், யாருக்கும் தலைவணங்க போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.