சுதந்திர காற்றை சுவாசிப்பது எனக்கு மகிழ்ச்சி-ப. சிதம்பரம்
ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இதனால் உச்சநீதிமன்றத்தில் அமலாக்குத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.கிட்டத்தட்ட 106 நாள்கள் சிறைவாசத்திற்கு பிறகு திகார் சிறையில் இருந்து சிதம்பரம் தொண்டர்களின் ஆரவாரத்துடன் வெளியே வந்தார்.
சிறையில் இருந்து வெளியேறிய உடனேயே, காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரம் புதன்கிழமை கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தார்.பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில்,உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதால் நான் மகிழ்ச்சியடைகிறேன், 106 நாட்களுக்குப் 106 நாட்களுக்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
ஏற்கனவே சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழக்கப்பட்டது.இதனிடையே அமலாக்குத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- ஆதாரங்களை கலைக்கும் முயற்சியிலோ அல்லது சாட்சியங்களை மாற்றும் முயற்சியிலோ ஈடுபடக்கூடாது.
- வழக்கு தொடர்பாக ஊடக சந்திப்பில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க கூடாது மற்றும் அறிக்கையும் வெளியிடக்கூடாது.
- அனுமதி இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது
- சிதம்பரத்துக்கு 2 நபர்கள் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் .