பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை, திரையிட்ட ஹைதராபாத் மாணவர்கள்.!
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படத்தை மாணவர்கள் குழு திரையிட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி தயாரித்த ஆவணப்படம் மத்திய அரசால் தடை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சிலர் இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளனர். மத்திய அரசால் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிபிசியின் மோடி குறித்த ஆவணப்படம், உண்மையில் தடை செய்யப்படவில்லை என திரையிட்ட மாணவர்களின் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத் கலவரம் தொடர்பாக, பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனம்(பிபிசி) தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசால் இந்த ஆவணப்படம் சமீபத்தில் தடை செய்யப்பட்டது. இந்த ஆவணப்படம் உண்மையில் தடை செய்யப்படாமல் இருந்ததால் மாணவர்கள் இதனை திரையிட்டதாக மாணவர்களின் தலைவர் மேலும் கூறினார்.
பல்கலைக்கழக விதிகளின்படி, மாணவர்கள் திரையிடுவதற்கு முன்பாக எந்த அனுமதியும் பெறவில்லை எனவும், வேறுசில மாணவர்களின் புகாரின் அடிப்படையில் மாணவர்கள் தடை செய்யப்பட்ட படத்தை திரையிட்ட தகவல் நிர்வாகத்திற்கு தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
“இந்தியா: மோடி கேள்வி” என தலைப்பிடப்பட்ட பிபிசியின் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது தொடர்பாக, அகில பாரத வித்தியார்த்தி பரிசத்(ABVP) அமைப்பானது பல்கலைக்கழகத்திடம் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளது.