டானா புயல் எதிரொலி: இந்த மூன்று மாநில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
டானா புயல் காரணமாக ஒரு சில மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.
ஒடிசா : மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான டானா புயல், நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பின்னர், அது வடக்கு ஒடிசா மற்றும் மேற்குவங்க கடற்கரை பகுதிகளில், பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மூன்று மாநிலபள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், மேலே குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே நேரத்தில் ரயில் சேவைகள் தடைபட்டுள்ளன, மேலும் புயலை சமாளிக்க இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் உள்ளது.
ஒடிசா
ஒடிசாவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 23 முதல் 25 வரை பாதிக்கப்படக்கூடிய 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து டி.கே.சிங் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கம்
புயல் காரணமாக ஒன்பது மாவட்டங்களில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அக்டோபர் 23 முதல் 26 வரை மூடப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
அதன்படி, இன்று முதல் அக்டோபர் 26ம் தேதி வரை, வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ், பூர்பா மேதினிபூர், பாஸ்சிம் மேதினிபூர், ஜார்கிராம், பாங்குரா, ஹவுரா, ஹூக்ளி மற்றும் கொல்கத்தா ஆகிய மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு
பெங்களூருவில் இடைவிடாத மழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பட்டயக் கல்லூரிகள், முதுகலை படிப்புகள், டிப்ளமோ, இன்ஜினியரிங், ஐடிஐ கல்லூரிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டபடி செயல்படும். நிலைமையை பொருத்து கூடுதல் விடுமுறை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.