கேரளாவில் மனிதாபிமான புரட்சி.. ஒரு உயிரை காப்பற்ற கைகோர்த்த மலையாள தோழர்கள்!
KERALA: சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை 34 கோடி ரூபாய் கிரவுட் ஃபண்ட் திரட்டி மீட்டுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த முன்னாள் ஆட்டோ ஓட்டுநரான அப்துல் ரஹீம், கடந்த 2006ம் ஆண்டு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அப்போது ரஹீமுக்கு சவுதி அரேபியாவின் ரியாத்தில் வீட்டு டிரைவராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அந்த வீட்டில் உள்ள 15 வயது மாற்றுத்திறனாளி சிறுவனை பார்த்துக்கொள்ளும் பணியையும் ரஹீம் பார்த்து வந்தார்.
ஒரு நாள் அந்த 15 வயது மாற்றுத்திறனாளி சிறுவனுடன் ரஹீல் காரில் சென்றபோது ஒரு பரிதாபமான சம்பவம் நிகழ்ந்தது. அது ரஹீமின் வாழ்க்கையை திருப்பி போடும் என்று அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார். அதாவது, போக்குவரத்து சிக்னலின்போது காரை நகர்த்தும்படி ரஹீமிடம் அந்த சிறுவன் வலியுறுத்தி உள்ளான்.
ஆனால், ரஹீம் அதனை செய்யாமல் சிக்னல் முடியும் வரை இருந்துள்ளார். இதனால் சிறுவன் ரஹீம் முகத்தில் எச்சில் துப்பவும், அடிக்கவும் தொடங்கியதால் நிலைமை மோசமடைந்தது. பின்னர் வாக்கு வாதத்தின்போது சிறுவன் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த மருத்துவ கருவியை எதிர்பாரத விதமாக தவறுதலாக தட்டிவிட்டுள்ளார்.
அந்த கருவி தான் சிறுவன் சாப்பிடுவதற்கும், சுவாசிப்பதற்கும் உதவும். அந்த கருவி காருக்குள் விழுந்ததும், சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அந்த கருவியை எடுத்து பொறுத்த ரஹீம் முயற்சித்தும் அந்த சிறுவன் உயிரிழந்துவிடுகிறான். இந்த சம்பவம் தான் ரஹீமை மரண வரை கொண்டு சேர்த்தது.
ரஹீம் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டு, அவருக்கு சவுதி அரேபியா சட்டத்தின்படி கடந்த 2018ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்க வேண்டும் என சிறுவனின் குடும்பத்தார் கேட்டுக்கொண்டதை அடுத்து ரஹீமின் வாழ்கை முடிவுக்கு வந்ததாக பார்கப்பட்டது.
மறுபக்கம் சம்பளம் தொகையை எதிர்பார்த்து காத்திருந்த ரஹீமின் மனைவி மற்றும் மகனுக்கு இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் இடிந்து போய்விடுகின்றனர். இதன்பின் நண்பர்களின் அறிவுறுத்தலின்படி ரஹீம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில் அவரது மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அதேசமயம் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருடன் ஒரு ஒப்பந்தம் 2023ம் ஆண்டு அக்.16ம் தேதி ஏற்படுகிறது. இழப்பீடாக 15 மில்லியன் (சுமார் ரூ.33 கோடி) சவுதி ரியால்கள் வழங்கினால் வழக்கை வாபஸ் பெறுவதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். அதுவும் 6 மாதங்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என கெடு வைத்தனர்.
அதன்படி பார்த்தால் இந்த ஒப்பந்தம் இம்மாதம் ஏப்ரல் மாதம் 16ம் தேதியுடன் முடிவடைந்துவிடும். அதற்குள் பணத்தை திரட்டி கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் குடும்பத்திற்கு அந்த தொகை எப்படி ஏற்பாடு செய்வது என்று திகைத்து ஒன்றும் புரியாமல் இருந்தனர்.
இந்த சூழலில் கேரளாவில் ஒரு மனிதாபிமான புரட்சியே ஏற்பட்டு, பெரும் நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி என்று உணர்த்தும் வகையில் நடந்துள்ளது. அதாவது, தங்களது நண்பரை காப்பாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று உணர்ந்து ரஹீமின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மலையாள மக்கள் Save Abdul Rahim என்ற பெயரில் கிரவுட் ஃபண்ட்-ஐ தொடங்குகிறார்கள்.
இதன் மூலம் தெரியாதவர்கள், தெரியாதவர்கள் என உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மலையாள தோழர்கள் உள்ளிட்ட பல தரப்பிடம் இருந்து நன்கொடை வசூலித்து வந்தனர். இது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கெடு வைக்கப்பட்ட ஏப்ரல் 16ம் தேதிக்குள் பணத்தை திரட்டி முடித்துள்ளனர். இதுவரை 34 கோடி ரூபாயை கிரவுட் ஃபண்ட் மூலம் சேர்த்து உள்ளனர். கேரளா மக்களின் புரட்சியால் ரஹீமின் விடுதலை சாத்தியமாகியுள்ளது.
சக மனிதனை மனிதனாக மட்டுமே பார்த்து அனைத்து வேறுபாடுகளையும் கலைந்து மனிதாபிமான உதவிக்காக ஒன்றாக கைகோர்த்து இருக்கிறார்கள் மலையாள தோழர்கள். இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி. இந்த நிகழ்வு மலையாளிகளின் மனம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது, ஒரு உயிரை காப்பற்ற உதவிய அனைவரும் ஒன்றாக கைகோர்த்து பலரது மனங்களை வென்றுள்ளது. எனவே, திரட்டப்பட்ட தொகையை உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தாரிடம் அளித்துவிட்டு, ரஹீமை மீட்கு வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.