கும்பமேளா: ‘கங்கையில் மல பாக்டீரியாக்கள்’ – மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிர்ச்சி தகவல்!
கங்கை மற்றும் யமுனை சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தின் பல பகுதிகளில் அதிக அளவு மனிதக்கழிவுகள் கலந்துள்ளது என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பிரயாக்ராஜ் : உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் அளவுக்கதிகமான “Faecal Coliform” பாக்டீரியா கலந்திருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும்.
இந்த தண்ணீரில் குளித்தால் அல்லது குடித்தால் வயிற்றுப்போக்கு, டைபாய்டு காய்ச்சல், ஹெபடைடிஸ் A உள்ளிட்ட கொடிய நோய்கள் வர வாய்ப்புள்ளது. இவை அதிகளவில் இருக்கும் ஆற்றில் நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், கங்கை மற்றும் யமுனை சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் நதியின் தண்ணீரில் மனிதக் கழிவில் உள்ள கிருமிகள் (faecal coliform) அதிக அளவில் உள்ளதால் குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. இது தொடர்பாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தனது அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) திங்கள்கிழமை சமர்ப்பித்தது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில், கழிவுநீர் அழுக்கு நீரின் குறிகாட்டியான ஃபீகல் கோலிஃபார்மின் அளவு 100 மில்லிக்கு 2500 யூனிட்கள் என்று கூறுகிறது. பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை நதிகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது தொடர்பான வழக்கை NGT தற்போது விசாரித்து வருகிறது. மகா கும்பமேளாவிற்கான கழிவுநீர் மேலாண்மை திட்டம் குறித்து NGT ஏற்கனவே உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, கும்பமேளாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கையில் எந்தக் குறைவும் இல்லை. சமீபத்தில் அரசாங்கம் 45 கோடி பக்தர்களின் எண்ணிக்கையை மதிப்பிட்டிருந்தது. ஆனால் இதுவரை கிட்டத்தட்ட 53 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.