மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!
மணிப்பூரில் முதலமைச்சர் பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்த நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5 நாள்களான நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதை பாஜகவால் இதுவரை முடிவெடுக்க முடியவில்லை. 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற கெடுவும் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைமுறைப்படுத்தப்படுவதாக உள்துறை அமைச்சக அறிவித்துள்ளது. முன்னதாக, மணிப்பூர் முதலமைச்சராக இருந்த பிரேன் சிங் பிப்.9ஆம் தேதி திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது ராஜினாமாக்களைத் தொடர்ந்து, பாஜகவின் வடகிழக்கு பொறுப்பாளர் சம்பித் பத்ரா, கட்சி எம்எல்ஏக்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார், ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை.
இதை தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா மற்றும் துணை ராணுவப் படை அதிகாரிகள் இன்று ராஜ்பவனில் ஒரு சந்திப்பை நடத்தினர். இதன் போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) பயன்பாடு மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அதிகாரிகள் அவருக்கு வழங்கினர்.
மாநில அரசு இந்த அரசியலமைப்பின் விதிகளின்படி செயல்பட முடியாதபோது, அரசியலமைப்பின் 356வது பிரிவின் கீழ் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் முடிவு எடுக்கப்படுகிறது. அதன்படி, 356வது சட்டப்பிரிவின் கீழ் மணிப்பூர் மாநிலத்தின் அனைத்து அதிகாரங்களும் குடியரசு தலைவர் வசம் செல்கிறது.