ஒரு மாத வாடகை வசூலிக்க கூடாது! வீட்டை காலி செய்ய வற்புறுத்தவும் கூடாது! – மத்திய அரசு அறிவுறுத்தல்!
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய உள்துறை அமைச்சகம், ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்துள்ளவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் தங்கியுள்ள வாடகை வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாத வீட்டு வாடகை வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாடகை வீட்டில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள், மாணவர்களை வீட்டை காலி செய்ய வற்புறுத்தக்கூடாது அவ்வாறு செய்தால், மாநில அரசுகள் உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கை காரணம் காட்டி, எந்த தொழில் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு இருப்பிடம், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை மாநில அரசு செய்து தர வேண்டும். எனவும், வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் எனவும் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.