மேற்கு வங்கத்தில் வீடு தேடி வரும் மதுபானம்.! அறிமுகம் செய்தது அம்மாநில அரசு.!
மேற்கு வங்க மாநிலத்தில் மது பிரியர்கள் வீடுகளுக்கே சென்று மதுபானங்களை விநியோகிக்கக் கூடிய வசதியை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளன.
நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுகளுடன் கூடிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில், குறிப்பாக தனிக்கடைகள் மற்றும் மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பல மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கடை வாசலில் மதுபிரியர்கள் வரிசையில் இன்று மதுபாட்டில்களை வாங்கி செல்கிறார்கள்.
இதனிடையே மதுக்கடைகளில் கூட்டம் குவிந்து வருவதால் தனிமனித இடைவெளி மற்றும் சமூக விலகலை பின்பற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநிலத்தில் மது பிரியர்கள் வீடுகளுக்கே சென்று மது விநியோகிக்கும் வசதி செய்யபட்டுள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் கூட்டம் கூடுவதை குறைப்பதற்கும், சமூக விலகலை உறுதி செய்வதற்கும் ஆன்லைன் முன்பதிவு மற்றும் மது பிரியர்கள் வீடுகளுக்கு சென்று வழங்குவதற்க்கான ஒரு இணையதளத்தை மேற்கு வங்க மாநில மதுபானங்கள் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையத்தில் 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்யலாம் என்று கூறியுள்ளது.
இதற்கு முன்னதாக, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வீட்டிற்கு மதுபான விநியோகத்தை ஆரம்பித்திருந்தன. பஞ்சாப் மாநிலத்தில் மது பிரியர்கள் வீட்டிற்கே சென்று மது விற்பனை செய்யப்படுவதாக அறிவித்திருந்தது. அதில், ஒரு வீட்டுக்கு 2 லிட்டர்கள் வரை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அளவை அந்தந்த பகுதியின் கலால் மற்றும் வரி உதவி ஆணையர்கள் நிர்ணயித்துக் கொள்ளவும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமுடக்கம் காலம் முடியும் வரை மட்டுமே இந்த வசதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.