அதிகரிக்கும் கொரோனா.. ஜம்மு, காஷ்மீரில் பள்ளிகளுக்கு விடுமுறை!
யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் முதல் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 2 நாட்களில் தினசரி பாதிப்பு 500-ஐ கடந்துவிட்டது.
இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,32,439 ஆக அதிகரித்துள்ளதை தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000-ஐ கடந்தது. இதன்காரணமாக அம்மாநிலத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் 11-ம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.