இந்தி, தேசிய மொழி! மகாராஷ்டிர அரசின் அறிவிப்புக்கு சிவசேனா எம்பி கேள்வி.!
மகாராஷ்டிர அரசு தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்தியை தேசிய மொழி என கூறியது சர்ச்சையாகியுள்ளது.
மாநில இந்தி சாகித்ய அகாடமியை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத் தீர்மானம் (ஜிஆர்), மகாராஷ்டிராவின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறையால் வெளியிடப்பட்டது. அரசின் இந்த தீர்மானத்தில் இந்தி, தேசிய மொழி என்று கூறப்பட்டது. இந்தி இலக்கியத்தை மேம்படுத்துவதற்காக, இந்தி சாகித்ய அகாடமி நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் எதிர்க்கட்சிகள், ஷிண்டே ஃபட்னாவிஸ் அரசை கடுமையாக விமரிசித்து வருகின்றனர். மேலும் இந்திய அரசு எந்த மொழிக்கும் ”தேசிய மொழி” என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடு பல மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளைக் கொண்டுள்ளது. எனவே எந்த மொழிக்கும் தேசிய மொழி அந்தஸ்து வழங்கப்படவில்லை.
இந்தி எப்போது நாட்டின் தேசிய மொழியாக மாறியது? பாஜக இப்போது மொழியையும் திணிக்கத் தொடங்கியுள்ளதா? என்று மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டி கேள்வி எழுப்பியுள்ளது. மாநில ஜிஆர்கள் கூட இப்போது டெல்லியில் இருந்து வரும் கட்டளை போல் தெரிகிறது என்று சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதியும் கூறினார்.