அதானி – ஹிண்டன்பர்க் 2.O : காங்கிரஸ் போராட்டமும்.., உச்சநீதிமன்ற வழக்கும்…  

Madhabi buch - Hindenburg Research - Goutam Adani

டெல்லி : அதானி நிறுவனத்தில் பெரும் அளவிலான பங்குகளை செபி தலைவர் வாங்கியுள்ளார் எனவும் அதனால் அதானி குழும விசாரணை முறையாக நடைபெறுமா எனவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த வருடம், இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், அதானி நிறுவனம் முறைகேடாக பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்து வருகிறது என்றும், போலியாக பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி, பங்குச்சந்தையில் முறைகேடாக வளர்ச்சியைக் காண்பித்து தங்கள் (அதானி) நிறுவனப் பங்குகளை உயர்த்தி பல்லாயிரம் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்தது.

ஹிண்டன்பர்க்கின் இப்படியான குற்றச்சாட்டுகள் இந்தியப் பங்குச்சந்தை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த வருட நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுக்க ஹிண்டன்பர்க் அறிக்கை – அதானி குழும முறைகேடு என குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் எழுப்பி நாடாளுமன்றத்தையே முடக்கினர். இந்த விவகாரம் இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்து சில நாட்களில் பெரும் சரிவைச் சந்தித்தது.

பின்னர் இந்த ஹிண்டன்பர்க் விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. அங்கு,  இந்தியப் பங்குச்சந்தையை கண்காணிக்கும் செபி (SEBI), அதானி – ஹிண்டன்பர்க் நிறுவன விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன் பெயரில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

செபி தலைவர் மாதபி புச் :

இப்படியான சூழலில் தான் கடந்த வாரம் ஹிண்டன்பர்க் நிறுவனம் மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டு மீண்டும் ஓர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ,  அதானி – ஹிண்டன்பர்க் நிறுவன விவகாரத்தை விசாரிக்கும் இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபி தலைவர் மாதபி புச், தனது கணவர் உடன் சேர்ந்து அதானி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பங்குகளை வாங்கி உள்ளார். அப்படி இருக்கையில் அதானி நிறுவனத்திற்கு எதிராக அவரால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு போல அல்லாமல் இந்த முறை ஹிண்டன்பர்க் அறிக்கையினால் கணிசமான அளவிலேயே பங்குசந்தையில் சரிவு ஏற்பட்டது. இருந்தும், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக கையிலெடுத்துள்ளது.

காங்கிரஸ் குற்றசாட்டு :

காங்கிரஸ் தலைமை அண்மையில் ஹிண்டன்பர்க் – அதானி நிறுவன முறைகேடு குறித்து கூறுகையில்,  செபி தலைவர் மாதபி புச் அதானி நிறுவனத்தில் பங்குகளை வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுக்குப் பொறுப்பேற்று செபி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த அதானி – ஹிண்டன்பர்க் விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நாடு முழுவதும் மாநிலங்களில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்த உள்ள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பாஜக கருத்து :

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து பாஜக சார்பில் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தில் ஆதாரமில்லா குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்தியப் பொருளாதார ஸ்திரத்தன்மையை உடைக்க பார்க்கிறது எனக் குற்றம் சாட்டியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு :

இந்த விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி ஓர் ரிட் மனு (இடையீட்டு மனு) ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே ஹிண்டன்பர்க் – அதானி விவகாரம் குறித்து நடைபெறும் வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே உத்தரவிடப்பட்ட 3 மாத கால அவகாசத்திற்குள் விசாரிக்காமல் செபி காலதாமதப்படுத்தி வருகிறது. இப்படியான சூழலில் செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றசாட்டு மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது என கூறி இது குறித்து உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என அந்த இடையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கையின்படி, அதானி நிறுவன விசாரணையில் முறைகேடு ஏற்பட்டுள்ளதா.? இந்த குற்றசாட்டுகளை அடுத்து செபி தலைவர் ராஜினாமா செய்வாரா என்பது அடுத்தடுத்த அரசியல் மற்றும்  நீதிமன்ற விசாரணை நகர்வுகளில் தெரியவரும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park