ஹிமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு..!
ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் புதைக்குழிகளில் சிக்கிய 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் நேற்று மதியம் 12.45 மணியளவில் ரெகாங் பியோ-சிம்லா என்ற நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் பல வாகனங்கள் புதைகுழியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ராம்பூர்-ஜூரி என்ற இடத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து மீது பாறைகள் உருண்டு மேல் விழுந்ததால் நிலச்சரிவில் சிக்கியுள்ளது. அருகில் சென்று கொண்டிருந்த கார் மீதும் பாறைகள் விழுந்துள்ளது.
தகவலறிந்து வந்த இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பேருந்து மற்றும் வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 13 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், இதில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இன்னும் பலர் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.