கஞ்சா செடி வளர்க்க அனுமதி! இமாச்சல பிரதேச அரசு ஒப்புதல்!
தொழில், அறிவியல், மருத்துவ ஆய்வுக்காக கஞ்சா செடியை வளர்க்க இமாச்சல பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தர்மசாலா : ஹிமாச்சல் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது மாநிலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டு வந்தன.
அப்போது தான் கஞ்சா செடி வளர்க்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது, தொழில்துறை பயன்பாடு, மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக கஞ்சா செடி வளர்த்து கொள்ளலாம் என்று மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய ஆய்வை மேற்கொள்ளும் பொருட்டு, சவுத்ரி சர்வான் குமார் க்ரிஷி விஸ்வவித்யாலயா – கங்காரா மாவட்டம் மற்றும் டாக்டர் ஒய்.எஸ். பர்மர் தோட்டக்கலை பல்கலைக்கழகம் – சோலன் மாவட்டம் ஆகிய வேளாண் பல்கலைக்கழகத்தினர் மட்டும் ஆய்வு பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட அளவு கஞ்சா செடி வளர்த்து கொள்ளலாம் என தற்போது கூறப்பட்டுள்ளது .
எந்த அளவு கஞ்சா செடி வளர்க்க வேண்டும்? எப்போது வளர்க்க வேண்டும் ஆகியவை பின்னர் இறுதி செய்யப்படும் என்றும், இந்த ஆய்வுகள் மாநில வேளாண் துறையுடன் இணைந்து அதன் கட்டுப்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் எனவும் ஒப்புதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, உத்தரகாண்ட், குஜராத், மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களை பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செடி வளர்ப்பு கடுமையான கண்காணிப்பில் இருக்கும் எனவும் பொதுமக்களுக்கு கஞ்சா செடி வளர்க்க அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.