ஹிஜாப் சர்ச்சை: மாணவிகள் காவி துண்டு ஊர்வலம் – வலுக்கும் போராட்டம்..!
கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளில் ஹிஜாப் அணிய உரிமை கோரி மாணவிகள் நடத்திய போராட்டம் 2-வது நாளாக தொடர்கிறது.
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்லூரிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை அடுத்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முதலில் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில், பின்னர் மற்றொரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் வகுப்பறையில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. கல்லூரி சீருடையில் ஹிஜாப் சேர்க்கப்படவில்லை, எனவே அதை அணிந்து வகுப்பிற்கு அனுமதிக்க முடியாது என்று கல்லூரி நிர்வாகம் கூறியது.
கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்த நிலையில், மாணவிகள் அதற்கு மறுத்து கல்லூரியின் முன் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்குள் நுழைய அனுமதிக்கப்படாததற்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் சில மாணவிகள் இன்று கழுத்தில் காவி துண்டு அணிந்து கல்லூரிகளுக்கு பேரணியாக சென்றனர்.
உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்பூரில் இருந்து வெளியான வீடியோவில், கல்லூரி உடையுடன் கழுத்தில் காவி துண்டை அணிந்துகொண்டு மாணவர்கள் மற்றும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கல்லூரிக்கு செல்லும் போது “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷம் எழுப்பியபடி இருந்துள்ளார். இருப்பினும், சலசலப்பு அதிகரிக்கும் முன், காவிதுண்டை அணிந்த மாணவர்களை போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அதே நேரத்தில், இந்த மாணவர்களின் போராட்டம் தேசிய செய்தியாக மாறியது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் பாஜகவை குற்றம் சாட்டி வருகிறது.