கர்நாடகாவில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பு! ஐபிஎஸ் அதிகாரியின் அட்டகாசமான செயல்!
கர்நாடகாவில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகிற நிலையில், சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக செல்லும் மக்களிடம், நியமிக்கப்பட்ட கட்டணத்திற்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
கர்நாடகாவில், தனியார் மருத்துவமனைகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுத் தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் மண்டலம் வாரியாக குழுக்களை அமைத்தார். இந்த குழுக்கள் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், பெங்களூர் ஆர்.ஆர் நகர் மண்டலத்தின் கண்காணிப்பு அதிகாரியாக ஐபிஎஸ் ரூபா பணியமர்த்தப்பட்டார். ஆய்வில் விதிகளை பின்பற்றாமல், எஸ்.எஸ்.எம்.என்.சி மருத்துவமனை, நோயாளிகளிடமிருந்து அதிகப் பணம் வசூலித்து வந்ததாக தெரிய வந்த நிலையில், தனியார் மருத்துவமனையின் பதிவீட்டை ஆராய்ந்ததில், 22 கொரோனா நோயாளிகளிடம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 3 லட்சத்து 5 ஆயிரம் வரை அதிகமாக வசூலித்தது தெரியவந்தது.
இதனையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி ரூபா மருத்துவமனை நிர்வாகம் 22 பேரிடம் கூடுதலாக வசூலித்த ரூ.24.80 லட்சம் கட்டணத்தை நோயாளிகளுக்கு திரும்ப பெற்று கொடுத்துள்ளார். இவரது இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.