மொபைல் இணையத் தடையை மணிப்பூர் அரசு நீக்க வேண்டும்.! உயர் நீதிமன்றம் உத்தரவு.!

Manipur High Court

மணிப்பூர் மாநிலத்தின் இம்பாலில் வசிக்கும் மைத்தேயி மற்றும் குக்கி ஆகிய இரண்டு பிரிவினர்கள் இடையே, கடந்த மே மாதம் முதல் நடந்த வன்முறையானது நாட்டையே உலுக்கியதோடு, நாடாளுமன்ற இரு அவைகளிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த கலவரத்திற்கு மத்தியில் இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்ற வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட இந்த கலவரத்தினால் இரு பக்கமும் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த கலவரத்தில் 170க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த கலவரம் காரணமாக மாநிலம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து செல்போனில் இணைய சேவை பயன்படுத்த முடியாது. பிராட்பேண்ட் சேவை மட்டுமே பயன்படுத்த முடியும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளோடு, மாநில அரசு இணைய சேவையை துவங்கியது.

தொடர்ந்து மாநிலத்தில் மொபைல் இன்டர்நெட் மீதான தடையை நவம்பர் 8ம் தேதி வரை நீட்டித்து மணிப்பூர் அரசின் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவைக் கணக்கில் எடுத்துக்கொண்ட மணிப்பூர் உயர்நீதிமன்றம், வன்முறையால் பாதிக்கப்படாத பகுதிகளில் இணைய சேவைகளை செயல்படுத்த மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று நடைபெற்ற பொதுநல வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதிபதி சித்தார்த் மிருதுல் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், மணிப்பூரில் அனைத்து மாவட்டங்களிலும் சோதனை அடிப்படையில் மொபைல் டவர்களை செயல்படுத்தவேண்டும்.மாவட்டத் தலைமையகத்தில் அரசு மொபைல் டவர்களை சோதனை அடிப்படையில் திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, அரசின் தடை உத்தரவுகள் பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் எனக் கூறிய உயர்நீதிமன்றம், மணிப்பூரில் இணைய சேவைகளை நிறுத்துவது தொடர்பான அனைத்து உத்தரவுகளின் நகல்களையும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.manipur.gov.in) பதிவேற்றம் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்