ஜார்கண்ட் முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முதலமைச்சாக ஹேமந்த் சோரன் மாநில ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றார்.
நிலமோடி சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜனவரியில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டார் ஹேமந்த் சோரன். அதற்கு முன்னதாக ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார் சோரன். அவருக்கு பதிலாக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் JMM மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பில் இருந்தார்.
கடந்த வாரம் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரமில்லை என்று கூறி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி இருந்தது ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம். இதனை அடுத்து, சம்பாய் சோரன் நேற்று ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
பின்னர், இன்று மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரி கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஹேமந்த் சோரன் ஆளுநரை சந்தித்தார். இதனை தொடர்ந்து ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அறிவித்தது போல, தற்போது ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஹேமந்த் சோரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 3வது முறையாக ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றுக்கொண்டார்.