நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி.! ஆட்சியை தக்கவைத்த I.N.D.I.A கூட்டணி.!
ஜார்கண்ட்: சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நிலமோசடி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் கீழ் கைது செய்யப்பட்ட சோரனுக்கு கடந்த சில வரங்களுக்கு முன்னர் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கிடையில் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து JMM மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பில் இருந்தார்.
ஹேமந்த் சோரன் ஜாமீனில் வெளியே வந்ததை அடுத்து சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் கூட்டணி கட்சியினரின் ஆதரவுடன் கடந்த வாரம் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர் இன்று (ஜூலை 8) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, இன்று ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தொடங்கியதும், மொத்தம் 81 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 41 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. மொத்தம் 75 உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். அதில் பாஜக உறுப்பினர்கள் 24 பேரும், AJSU கட்சி உறுப்பினர்கள் 2 பேரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்குகொள்ளாமல் பேரவையில் இருந்து வெளியேறினர்.
நளின் சோரன் மற்றும் ஜோபா மாஜி ஆகிய ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் அவர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்குகொள்ளவில்லை. I.N.D.I.A கூட்டணியில் உள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர்கள் 27 பேர், காங்கிரஸ் கட்சியின் 17 உறுப்பினர்கள், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி உறுப்பினர் ஒருவர் என மொத்தம் 45 பேர் முதல்வர் ஹேமந்த் சோரன் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.