மீண்டும் ஜார்கண்ட் முதல்வர் பதவி.! I.N.D.I.A கூட்டணி தலைவர்களுடன் ஆளுநர் மாளிகையில் ஹேமந்த் சோரன்.!

ஜார்கண்ட்: மீண்டும் ஆட்சியமைக்க இன்னும் சற்று நேரத்தில் ஹேமந்த் சோரன் I.N.D.I.A கூட்டணி தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நிலமோசடி புகாரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அப்போதைய ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைது செய்வதற்கு முன்னர் தனது முதல்வர் பதவியை சோரன் ராஜினாமா செய்து இருந்தார். இதனை அடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் சம்பாய் சோரன் கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் புதிய முதல்வராக பதவி ஏற்றார்.
கடந்த வாரம், ஹேமந்த் சோரன் கைதில் போதிய ஆதாரமில்லை என கூறி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் முதல்வராகும் முனைப்பில் ஹேமந்த் சோரன் செயல்பட்டு வருகிறார். முன்னதாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் நேற்று இரவு சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.
இதனை அடுத்து மாநில கூட்டணி கட்சி தலைவர்களான I.N.D.I.A கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் உடன் ஹேமந்த் சோரன், ராஞ்சியில் உள்ள ஜார்கண்ட் மாநில ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர ஆளுநர் மாளிகை விரைந்து உள்ளனர்.