#HelicopterCrash:நாடாளுமன்றத்தில் அஞ்சலி;மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல்!
டெல்லி:முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,அதில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது,வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். தமிழக அரசு சார்பில் முதல்வர்,அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,விபத்து குறித்து இரு அவைகளிலும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில்,”ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.குரூப் கேப்டன் வருண் சிங் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உள்ளார்.அவரது உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்திய விமானப்படை (IAF) ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் தலைமையில் விசாரணை நடத்தப்படும். விசாரணைக் குழு நேற்று வெலிங்டனுக்குச் சென்று விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் இன்று மாலைக்குள் டெல்லி கொண்டு வரப்படும். அதன்பின்னர்,ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடைபெறும்.மேலும்,உயிரிழந்த ராணுவ வீரர்களின் இறுதி சடங்குகளும் அரசு மரியாதையுடன் நடைபெறும்”,என்று தெரிவித்துள்ளார்.
The last rites of CDS General Bipin Rawat will be performed with full military honours. The last rites of other military personnel will be performed with appropriate military honour: Defence Minister Rajnath Singh in his statement in LS on the military chopper crash in Tamil Nadu pic.twitter.com/LfWHDrVaIc
— ANI (@ANI) December 9, 2021