தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை.! வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.!
தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் வயலில் சிக்கி தவித்த 12 பேரை இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே பொது மக்கள் பலர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். மேலும் கனமழை காரணமாக ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் என அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அது மட்டுமின்றி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதால் போக்குவரத்து வசதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானாவில் உள்ள பூபாலபள்ளி மாவட்டத்தில் ஓடும் சலி கால்வாயில்(சலிவாகு) வெள்ளம் நீர் அதிகமானதால், அதற்கு அருகிலுள்ள உள்ள கிராமங்களிலும், வயல்களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நேரத்தில் சல்வாகு கால்வாயிற்கு அருகிலுள்ள வயலில் 12 பேர் சென்றுள்ளனர். ஆனால் வெள்ளம் காரணமாக திரும்பி வர இயலாமல் சிக்கி கொண்ட அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் தோல்வியை தழுவியதை அடுத்து, இறுதியாக ஹெலிகாப்டரை பயன்படுத்தி சிக்கி கொண்ட 12 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதனையடுத்து சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெத்தவாகு கால்வாயில் ஓடும் மழை வெள்ளத்தில் அந்த வழியாக வந்த லாரி ஒன்று அடித்து செல்லப்பட்டது. லாரியுடன் அடித்து செல்லப்பட்ட டிரைவர் மர கிளைகளை பிடித்து தொங்க, அவரை படகு மூலம் மீட்பதற்கான முயற்சிகள் தோலிவியடைந்தது. அதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் கயிறை வீசி அவரை காப்பாற்ற முயன்ற போது, கயிறை சரியாக கட்டாத காரணத்தால் அறுந்து விழுந்ததில் டிரைவர் கால்வாய் தண்ணீரில் விழுந்து அடித்து செல்லப்பட்டார். தற்போது அவரை தேடும் பணிகள் நேர்த்தியாக செயல்பட்டு வருகிறது.