மும்பை கனமழை : பள்ளி கல்லூரிகள் விடுமுறை … மீட்புப்பணிகள் தீவிரம் …!
மும்பை : மும்பை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. மஹாராஷ்ராவில் உள்ள மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை 1 மணி அளவில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது, இந்த கனமழை காலை 7 மணி வரை நிற்காமல் பெய்துள்ளது.
சுமார் 6 மணி நேரம் பெய்த இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு, முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கையாக மும்பையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளனர். 6 மணி நேரம் இடைவிடாது பெய்த இந்த கனமழையில் 300 மிமீ அளவிலான மழை பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும், கனமழை காரணமாக மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில் போக்குவரத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் தடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 5 தொலைதூரம் ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, பேருந்து சேவைகளும் முடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள பொது மக்கள் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மகாராஷ்டிராவின் முக்கிய இடங்களான புனே, ரத்னகிரி, ராய்காட், சிந்துதுர்க், அமராவதி மற்றும் நாக்பூர் மாவட்டங்களிலும் ஐஎம்டி (IMD) மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுத்துள்ளனர். மேற்கொண்டு அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு (ஜூலை-10 வரையில் ..) கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறையும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மும்பையில், மழை காரணமாக வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டு மக்களை காப்பற்றி வருகின்றனர். மேலும், அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்த இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுக்காப்பாக இருக்க வலியுறுத்தி அறிவுறுத்தபடுகிறார்கள்.