குஜராத் கனமழை : 25 தாண்டிய பலி எண்ணிக்கை! தற்போதைய நிலை என்ன?
குஜராத் : 4 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக பேய் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களைத் தொடர்ந்து மீட்பு பணியினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17000 மேற்பட்ட மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது, வீடுகளிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் மக்களைப் படகு மூலம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுவருகின்றனர். குஜராத்தில் 122 அணைகள் முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. இதனால், அங்குக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியும் உள்ளார்கள். மேலும், முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புகளை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்திந்துளார்.
இது பற்றி முதலமைச்சர் பூபேந்திர படேல் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “குஜராத் முழுவதும் கடந்த மூன்று நாட்களாகக் கனமழை பெய்து வரும் நிலையில், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மீண்டும் ஒருமுறை என்னுடன் தொலைப்பேசியில் பேசி நிலைமையைக் கேட்டறிந்தார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் குறித்து நான் அவரிடம் தெரிவித்தேன்.
விஸ்வாமித்ரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து கவலை தெரிவித்தார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மற்றும் உதவிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். மேலும், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் சுகாதாரம், மக்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதலைப் பிரதமர் மோடி எனக்கு வழங்கினார். மேலும் மத்திய அரசு அனைத்து ஆதரவையும் அளிக்கும் என உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை விரைவாகச் செய்ய வேண்டுமென மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கேவும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையில், மேலும் 5 நாட்களுக்கு குஜராத்தில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அலெர்ட் கொடுத்துள்ளது.