வட இந்தியாவில் தொடரும் கனமழை..! 24 மணி நேரத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!
வட இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் வீடுகள், கால்நடைகள் அடித்து செல்லப்பட்டதோடு பலர் உயிரிழந்துள்ளனர்.
வடஇந்தியாவில் சில இடங்களில் கடந்த 3 நாட்களாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் இறந்தனர். மேலும், பலர் வீடுகளை இழந்து வெள்ளத்தில் சிக்கித்தவித்தனர். ஜம்முகாஷ்மீர், உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, பஞ்சாபில் பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தினால் 20 வீடுகள் அடித்து செல்லப்பட்டதோடு 10 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 10 பேரில், தலா இருவர் ரோபர், ஃபதேகர் சாஹிப், நவன்ஷாஹர் மற்றும் ஹோஷியார்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர் மோகா மற்றும் ஜலந்தரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களில் இடைவிடாத மழையால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டு 40 பெரிய பாலங்கள் சேதமடைந்துள்ளது. இதில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 1,300 சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், சுமார் 40 கடைகள் மற்றும் 30 வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பின், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கசோல், மணிகரன், கீர் கங்கா மற்றும் புல்கா பகுதிகளில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வான்வழி ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை மீட்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.