கனமழை வெள்ளத்தால் நிலச்சரிவு: உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசத்தில் 81 பேர் பலி!
கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் இடைவிடாத கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 81 பேர் பலியாகினர். இதன் காரணமாக, பல இடங்களில் வீடு இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்களை மீட்கவும், இடிபாடுகளில் இருந்து உடல்களை வெளியே எடுக்கவும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அடுத்த சில நாட்களில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் கிருஷ்ணா நகரில் உள்ள சுமார் 15 வீடுகளை காலி செய்து குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
விமானப்படை ஹெலிகாப்டர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் என்டிஆர்எஃப் உதவியுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு:
இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 71 ஆக உயர்ந்தது. கடந்த மூன்று நாட்களில் குறைந்தது 71 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. 13 பேர் இன்னும் காணவில்லை என்றும், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மொத்தம் 57 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று என்று அம்மாநில வருவாய் முதன்மைச் செயலாளர் ஓன்கர் சந்த் சர்மா தெரிவித்துள்ளார்.