கனமழையை தொடர்ந்து குளிர்! டெல்லி மக்களை வாட்டி வதைக்கும் வானிலை!
டெல்லி என்.சி.ஆர் பகுதியில் நாளை வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர் பகுதியின் பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் அச்சத்தை ஏற்படுத்தியது.
கனமழை மெது மெதுவாக குறைந்த நிலையில், குளிர் அளவும் டெல்லியில் அதிகமானது. பகல் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், அடுத்ததாக குளிர் அளவு அதிகமானதால் மக்கள் குளிரில் நடுங்கினார்கள். வானிலை மாறிகொண்டே இருப்பதால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர். டெல்லியில் பெய்த கனமழை இதுவரை இல்லாத அளவில் இந்த டிசம்பர் மாதம் பதிவாகியுள்ளது.
கடந்த 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 71.8 மிமீ மழை பெய்ததில் இருந்து இப்போது அதிக அளவு மழை பெய்துள்ளது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் சனிக்கிழமை காலை 8.30 மணி வரை நகரில் 41.2 மி.மீ மழை பெய்துள்ளது. மொத்தமாக இந்த டிசம்பர் மாதம் 75.7 மிமீ மழை பதிவாகியுள்ளது.
நாளை மழைக்கு வாய்ப்பு இருக்கா?
டிசம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. அடர்ந்த பனிமூட்டம் சில இடங்களில் அதிகமாக இருக்கும். அடர்ந்த பனிமூட்டம் முதல் மிக அடர்த்தியான பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. டெல்லியிலும், குருகிராமிலும் ஆரஞ்சு அலர்ட்டும், ஃபரிதாபாத், காசியாபாத், கவுதம் புத்த நகர் ஆகிய இடங்களில் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரியாகவும், அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரியாகவும் இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆண்டின் கடைசி இரண்டு நாட்களான டிசம்பர் 30, 31 ஆகிய நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கலாம். குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸை எட்டும் மற்றும் மூடுபனி பிரச்சினை இருக்கும். இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி, காசியாபாத், குருகிராம் மற்றும் கவுதம் புத்த நகர் ஆகிய பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.