வெப்ப அலை, 8 மாநிலங்களுக்கு எச்சரிக்கை; தடுக்கும் வழிமுறைகள்.!
இந்திய வானிலை ஆய்வு மையம் எட்டு மாநிலங்களுக்கு, கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கை:
மேற்கு வங்காளம், பீகார், சிக்கிம், ஒடிசா, ஜார்கண்ட், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பச் சலனம் அதிகரித்து வருவதால், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
வெப்பஅலை:
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரித்து, அதன்பிறகு குறையும் என ஐஎம்டி எச்சரித்துள்ளது. கிழக்கிந்திய மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பம் தொடரும் என்றும், அதன்பிறகு குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை:
மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40-44 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. வடமேற்கு இந்தியாவில், அடுத்த நான்கு நாட்களில் மேற்கு இமாலயப் பகுதியில் இடியுடன் கூடிய மழை அல்லது மிதமான பரவலான மழை பெய்யக்கூடும் என்றும், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை (அ) மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் ராஜஸ்தானில் ஏப்ரல் 18 முதல் 21 வரை மழை பெய்யக்கூடும் என்றும் ஐஎம்டி அறிவித்துள்ளது.
வழிமுறைகள்:
கோடைக்காலத்தில் அதிக வெப்பம் நிலவுவதால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது, இதனால் சோர்வு, தலைவலி, தொடர் காய்ச்சல், மயக்கம், அடர் நிறத்தில் சிறுநீர் மற்றும் கண் எரிச்சல் ஆகியவை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, அடிக்கடி தண்ணீர் அருந்தவும், ஜூசியான பழங்களை சாப்பிடவும், நீரிழப்பைத் தடுக்க ஓஆர்எஸ் கரைசல் குடித்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வெப்பச்சலனத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, குளிர்ந்த அல்லது ஐஸ் தண்ணீரில் குளிப்பது மிகவும் பயனுள்ள வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவர் எவ்வளவு விரைவாக குளிர்ந்த நீரில் தன் உடலை நனைக்கிறாரோ அவ்வளவு குறைவான ஆபத்து என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.