இவர்கள் இருக்கும் கட்சியில் தன்னால் இருக்க முடியாது.! பாஜகவில் இருந்து விலகிய நடிகை.!
டெல்லியில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு, ஆதரவாளர்களுக்கும் நடந்த வன்முறை சம்பவத்தில் ஒரு காவலர் மற்றும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 42 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீஸார் 200-க்கும் மேற்பட்ட எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த வன்முறை தொடங்குவதற்கு முன்னதாக பா.ஜ.க-வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அன்ராக் தாகூர் போன்ற தலைவர்கள் வன்முறைகளைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி முரளிதர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் தன்னால் இருக்க முடியாது எனக் கூறி பா.ஜ.க-விலிருந்து விலகியுள்ளார் மேற்கு வங்க நடிகை சுபத்ரா முகர்ஜி.
இதனிடையே மேற்குவங்கத்தில் டிவி சீரியல் நடிகையாக நடித்து வரும் சுபத்ரா, கடந்த 2013ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா ஆகியோர் வெறுக்கத்தக்க கருத்துகளைக் கூறியுள்ளனர். ஆனால் தற்போது வரை அவர்கள் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று தான் விலகியதற்கான காரணத்தை சுபத்ரா தெரிவித்துள்ளார்.