கொரோனாவால் இத்தனை குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனரா! தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தகவல்!
இதுவரை நாடு முழுவதும் கொரோனாவால் 1,742 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரித்து வரும் நிலையில், இது குறித்து கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் பெற்றோரை இறந்த குழந்தைகளின் விபரம் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து மே 30-ஆம் தேதிக்குள் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.
மேலும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மே 31-ஆம் தேதிக்குள் இது குறித்து முறையான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்தியாவில் இதுவரை தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 1,742 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 9,346 குழந்தைகளின் பெற்றோரை இழந்துள்ளதாகவும், அதில் 1742 குழந்தைகள் தாய் தந்தை இருவருமே இறந்துள்ளதாகவும், 140 குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும், மேலும் 7,464 குழந்தைகள் தாய் தந்தை யாரேனும் ஒருவரை இழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் இதுவரை 16 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாகவும், 143 குழந்தைகள் தாய் அல்லது தந்தை யாரேனும் ஒருவரை இழந்துள்ளதாகவும் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் குறிப்பிடப்பட்டுள்ளது.