ஹத்ராஸ் வழக்கு.. 4 பேரையும் தூக்கிலிட வேண்டும்- ராம்தாஸ் அத்வாலே..!
ஹத்ராஸ் பாலியல் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் கடந்த மாதம் 14-ம் தேதி புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, இளைஞர்கள் 4 பேர் அந்த இளம் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கடுமையாக தாக்கியதாகவும், நாக்கை வெட்டியதாகவும் தெரிகிறது.
பலத்த காயங்களுடன் கடந்த இரண்டு வாரங்களாக அந்த இளம்பெண் உயிருக்கு போராடி வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (29-ம் தேதி ) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறுதிச் சடங்கிற்காக அப்பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எடுத்துச் சென்று அவசர அவசரமாக நள்ளிரவில் தகனம் செய்தனர் எனவும் கூறப்படுகிறது. ஹத்ராஸ் சம்பவத்திற்கு பல தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.