ஹரியானா வன்முறை: இயல்பு நிலைக்கு திரும்பிய குருகிராம்..! 144 தடையை நீக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தில் கடந்த திங்களன்று இந்து அமைப்பினர் ஊர்வலம் செல்லும் போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை கலவரமாக மாறியது. இதில் இதுவரை 2 ஊர்காவலப்படை காவலர்கள், 4 பொதுமக்கள் என 6 பேர் இந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஹரியானா மட்டுமின்றி டெல்லியிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் பஜிரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் காவல்துறையினர் டெல்லியிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுஹ் மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்ட காரணத்தால் சுற்றுவட்டாரத்தில் 7 மாவட்டங்களில் 144 தடை விதிக்கப்பட்டதோடு, அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், குருகிராம் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து, மாவட்டத்தில் அமலில் இருந்த 144 தடை உத்தரவை நீக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், நூஹ் துணை ஆணையர் திரேந்திர கட்கடா மற்றும் நூஹ் எஸ்பி நரேந்திர பிஜர்னியா ஆகியோர் தௌரு காவல் நிலைய எல்லையில் உள்ள உள்ளூர் மக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.