ஹரியானா வன்முறை : 116 பேர் கைது..! உஷார் நிலையில் டெல்லி..!
ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் எனும் இந்து அமைப்பினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த பேரணி குருகிராம் – அல்வார் தேசிய நெடுஞ்சாலை வந்த போது திடீரென அங்கு ஒரு குழு வந்ததாகவும், அப்போதும் இரு தரப்பினரிடையே வன்முறை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இஸ்லாமியர்கள் படுகொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்ட வந்த முக்கிய குற்றவாளியான தலைமறைவான பசு காவலர் மோனு மனேசரும் நிகழ்வில் கலந்துகொள்வார் என்று வதந்தி பரவிய நிலையில், இந்த வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது.
அங்கு இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த காவல்துறையினர் களமிறங்கினார். கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். இதனால் அப்பகுதியில் 144 தடை போடப்பட்டிருந்தது. மேலும், பதற்றம் அதிகமாக உள்ள பகுதிகளில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையசேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறையில் ஹரியானாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து டெல்லி அருகே உள்ள குருகுராமிலும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டனர். 40 வழக்குகளை பதிவு செய்த போலீசார், 100க்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.
டெல்லி புறநகரான நொய்டாவில் இன்று இந்துத்துவா இயக்கங்கள் வி.ஹெச்.பி. , பஜ்ரங் தள் இணைந்து பிரம்மாண்ட போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்து நிலையில், திடீரென பஜ்ரங் தள் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து, டெல்லி புறநகர் பகுதியில் வன்முறை சம்பவங்கள் நிகழாத வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.