14 மாவட்டங்களில் பட்டாசு விற்க, வெடிக்க தடை – ஹரியானா அரசு!
ஹரியானா மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருகிற நவம்பர் மாதம் நான்காம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது முதல் எடுக்கப்பட்டு வருகிறது. ஒருசில மாநிலங்களில் பட்டாசுகளை வெடிப்பதற்கு கால நேரங்கள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் பட்டாசுகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஹரியானாவில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும் டெல்லிக்கு அருகிலுள்ள பிவானி, சர்கி தத்ரி, பரிதாபாத், குருகிராம், ஜஜ்ஜார், ஜிந்த், கர்னல், மகேந்திரகர்க், நுக்,பல்வல், பானிபட், ரேவரி, ரோதக் மற்றும் சோனிபட் ஆகிய 14 மாவட்டங்களில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளுக்கு ஆன்லைன் மூலமாகவும் பட்டாசுகளின் விற்பனைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் டெல்லியில் காற்றின் தரம் மோசமானதை தொடர்ந்து அங்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து, ஹரியானா மாநிலத்திலும் டெல்லியை ஒட்டியுள்ள இந்த 14 மாவட்டங்களுக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளுக்கு கூட பசுமை பட்டாசுகளை தான் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் மேம்பட்ட பகுதிகளில் மட்டும் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.